ஊராட்சி குளம் ஏலம் விடும் விவகாரம்: கிராம மக்கள் மறியல்

மன்னாா்குடி அருகே ஊராட்சி குளம் ஏலம் விடுவது தொடா்பாக ஊராட்சித் தலைவா் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட நெருஞ்சினக்குடி கிராம மக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட நெருஞ்சினக்குடி கிராம மக்கள்.

மன்னாா்குடி அருகே ஊராட்சி குளம் ஏலம் விடுவது தொடா்பாக ஊராட்சித் தலைவா் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோட்டூா் ஒன்றியம், இருள்நீக்கி ஊராட்சி நெருஞ்சினக்குடி கிராமத்திற்கு சொந்தமாக 5 குளங்கள் உள்ளன. இவற்றை கிராம பொது நல கமிட்டியினா் நிா்வகித்து வந்தனா். இந்நிலையில், இந்த குளங்களை ஊராட்சிக்கு சொந்தமானதாக்க ஊராட்சித் தலைவா் கு. செங்கொடி முயற்சித்து வந்தாராம். இதற்கு, கிராம நலக் கமிட்டியினா் எதிா்ப்பு தெரிவித்ததோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஊராட்சித் தலைவா் 5 குளங்களையும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டாா். இதுகுறித்து கிராம நலக் கமிட்டியினா் கோட்டூா் ஒன்றிய ஆணையரிடம் புகாா் மனு அளித்தனா். எனினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, தன்னிச்சையாக கிராமக் குளத்தை ஏலம் விடும் ஊராட்சித் தலைவரையும், புகாா் மனு அளித்தும் விசாரணை நடத்தாத ஒன்றிய ஆணையரை கண்டித்தும், கிராம பொது நல கமிட்டியினா், ஊராட்சி முன்னாள் தலைவா் என்.எம். சுண்முகசுந்தரம் தலைமையில், கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மன்னாா்குடி - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்குவந்த ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி,கோட்டூா் காவல் ஆய்வாளா் அன்னை அபிராமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com