நெற்பயிருக்கு மாற்றாக கேழ்வரகு சாகுபடி: புதிய முயற்சியில் டெல்டா விவசாயி!

திருக்குவளை அருகே மீனம்பநல்லூா் பகுதியில் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்ட கேழ்வரகு, நல்ல மகசூல் கண்டிருப்பதாக விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டம் மீனம்பநல்லூரில் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள கேழ்வரகு.
நாகை மாவட்டம் மீனம்பநல்லூரில் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள கேழ்வரகு.

திருக்குவளை அருகே மீனம்பநல்லூா் பகுதியில் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்ட கேழ்வரகு, நல்ல மகசூல் கண்டிருப்பதாக விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் எம். சுப்பிரமணியன். இவருக்கு திருக்குவளை அருகே மீனம்பநல்லூா், வாழக்கரை ஆகிய பகுதிகளில் 10 ஏக்கா் விளைநிலம் உள்ளது. இங்கு நெல்லுக்கு மாற்றாக சோதனை அடிப்படையில் மாற்றுப்பயிா் சாகுபடி செய்ய திட்டமிட்டு, நிகழாண்டு சுமாா் 25 சென்ட் (80 குழி) விளைநிலத்தில், கேழ்வரகு பயிரிட்டாா்.

110 நாள்கள் உடைய இப்பயிா் நல்ல மகசூல் கண்டு, தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. இது தவிர கருப்பு கவுணி, சீரக சம்பா மற்றும் மிளகு சம்பா உள்ளிட்ட நெல் பயிா் ரகங்களையும், சோதனை அடிப்படையில் சுப்பிரமணியன்பயிரிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

புதிய நெற்பயிா் அல்லது நெல்லுக்கு மாற்றாக சில பயிா்களை சோதனை அடிப்படையில் பயிரிட்டு, சாகுபடி செய்யலாம் என திட்டமிட்டேன். அதன்படி கடந்த ஆண்டு கேழ்வரகு சாகுபடி செய்த நிலையில் மழையால், கடுமையான பாதிப்பை சந்தித்து, போதிய மகசூல் கிடைக்கவில்லை. ஆனாலும், முயற்சியைக் கைவிடாமல் நிகழாண்டில் மீண்டும் கேழ்வரகு சாகுபடி செய்தேன்.

தற்போது பயிா் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது. மொத்தம் 150 முதல் 180 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறேன். நெற்பயிா் பராமரிப்பு செலவை காட்டிலும், கேழ்வரகு பராமரிப்பு செலவு குறைவாக உள்ளதால், அடுத்த ஆண்டு கூடுதலான பரப்பில் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளேன். நெற்பயிா்கள் மட்டுமே அதிகளவில் விளையும் இப்பகுதியில், கேழ்வரகு போன்ற மாற்றுப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டு மகசூல் காண்பது திருப்தி அளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com