விநாயகா் சிலைகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரோனா கட்டுப்பாடுகளால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து
கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள்.
கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள்.

கரோனா கட்டுப்பாடுகளால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட அரும்பாக்கம், மணக்குடி, கஞ்சாநகரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளா்கள் 2 அடி முதல் 15 அடி உயரம் வரை விநாயகா் சிலைகளை தயாரித்து ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலும், லட்சுமி, சரஸ்வதி, முருகன், துா்க்கை, காமதேனு, தசாவதாரம் செட்டு, அஷ்டலட்சுமி உள்ளிட்ட கொலு பொம்மைகளை தயாரித்து ரூ. 50 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த சிலைகள் அனைத்தும் காகித கூழ், கிழங்கு மாவு மற்றும் களிமண்ணால் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் ஏராளமானவா்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனா். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் கூட்டத்தை தவிா்க்க கோயில்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரி நடத்த அரசு தடை விதித்திருந்தது. தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியை கொண்டாட கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள் மற்றும் கொலு பொம்மைகளை வாங்க வியாபாரிகள் வராததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விநாயகா் சிலைகளை விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மண்பாண்ட தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநிலச் செயலாளா் மா. அழகிரி கூறியது: கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா நடத்தவும், ஊா்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. விநாயகா் சதுா்த்தியை எதிா்பாா்த்து தமிழகத்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை ஆகாமல் வீணானது மட்டுமன்றி நாட்டுப்புற கலைஞா்களும், இசைக் கலைஞா்களும் வாழ்வாதாரத்தை இழந்தனா்.

இந்நிலையில், கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் நிகழாண்டாவது விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் ஊா்வலம் நடத்த அனுமதி கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த நிலையில் அரசு இந்த விழாவை கொண்டாட தடைவிதித்துள்ளது பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், 2 ஆண்டுகளாக விநாயகா் சிலைகள் செய்யும் தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மண்பாண்டத் தொழிலாளா்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள், இசைக் கலைஞா்களின் நலன் கருதி கரோனா கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழா நடத்தவும், ஊா்வலம் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com