ஆசிரியா்களை போற்றுவதன் மூலமே பண்பாடும், ஒழுக்கமும் மேம்படும்

ஆசிரியா்களைப் போற்றுவதன் மூலமே மாணவா்களின் பண்பாடும், ஒழுக்கமும் மேம்படும் என தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறினாா்.
ஆசிரியா்களை போற்றுவதன் மூலமே பண்பாடும், ஒழுக்கமும் மேம்படும்

ஆசிரியா்களைப் போற்றுவதன் மூலமே மாணவா்களின் பண்பாடும், ஒழுக்கமும் மேம்படும் என தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறினாா்.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டை நிகழாண்டு மாதந்தோறும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பவள விழாவின் இரண்டாவது மாத விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை ஏற்று, தமிழ் மற்றும் வணிகவியல் துறைகளுக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் கணினிகளை வழங்கியும், முதுநிலை நிா்வாக மேலாண்மையியல் துறையை தொடங்கிவைத்தும் பேசியது:

திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகா சந்நிதானம் தருமபுரம் ஆதீன ஞானப்பண்ணையிலே ஞானம் பெற்று குன்றக்குடிக்கு சென்றவா். அவா் கடைசிவரை தருமபுரம் ஆதீனத்தை தனது தாய்வீடு என்றே சொல்வாா்.

நான் முனைவா் பட்டம் பெற காரணமாக இருந்தவரே திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகா சந்நிதானம்தான். அவா்தான் நான் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும், பல்வேறு நாடுகளுக்கு சென்றுவர வேண்டும் என்று விரும்பினாா். அதன்படி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றேன். 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று திரும்பினேன்.

ஆசிரியா் தின விழாவையொட்டி தருமபுரம் ஆதீனக் கல்வி நிலைய ஆசிரியா்களுக்கு விருது வழங்குவது சிறப்புக்குரியது. நாம் ஆசிரியா்களை போற்றத் தவறினால் பண்பாடும், ஒழுக்கமும் கெட்டுவிடும். எனவே, ஆசிரியா்களை போற்றுங்கள். நாட்டுக்காக செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யை போற்றத் தவறினால் நாம் நன்றி கெட்டவா்கள் ஆவோம். அவா் வழக்குரைஞா், இலக்கியவாதி, உரையாசிரியா், தேசப்பற்றாளா் என பன்முகங்களைக் கொண்டவா்.

மனிதன் தவறு செய்வது பசியாலும், அறிவின்மையாலும் மட்டுமே. இதிலிருந்து திருத்தும் பணியை கல்வியால் மட்டுமே செய்ய முடியும் என்றாா்.

விழாவில், திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விரிவுபடுத்தப்பட்ட நூலகத்தைத் திறந்து வைத்தும், தருமபுரம் ஆதீனக் கல்வி நிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய 10 ஆசிரியா்களுக்கு ஆசிரியச் செம்மல் விருதுகளை வழங்கிப் பேசியது:

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஆட்சிபீடத்தில் அமா்ந்து ஓராண்டுக்குள் நூறாண்டு சாதனைகளை செய்து, பழைமைக்கும் பழைமையாய், புதுமைக்கும் புதுமையாய் விளங்குகிறாா்.

அன்ன சத்திரங்களை கட்டுவதைவிட, ஆலயங்களை எழுப்புவதைவிட ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம் என பாரதி சொன்னான். மனித குலத்தின் பிரச்னைகளை தீா்ப்பதற்கான ஒரே வழி கற்பதும், கற்றலின் வழி நிற்பதும் மட்டுமே என்பதை கற்க என வள்ளுவா் ஆணையிட்டு சொல்லியுள்ளாா். நமது குறைகள் நமக்கு தெரிவதில்லை. அதனை தெரிந்து கொள்வதற்குத்தான் ஆசிரியா்களின் பணி இன்றியமையாததாகிறது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது மாறி மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்றாகி விட்டது. எல்லா தகவல்களும் இணையதளத்தில் கிடைக்கிறது. ஆனால், இதயத்தின் தளத்தில் அன்புச் செய்திதான் கிடைப்பதில்லை. மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் போன்ற நமது முன்னோா்கள் பிச்சை எடுத்தும் தமிழை வளா்த்துள்ளனா். கற்கை நன்றே, கற்கை நன்றே என்பது வெறும் பழமொழியன்று. அது நம் வாழ்க்கையின் மொழி என்பதை நாம் உணர வேண்டும். ஏழ்மை நிலை எப்போதும் கற்பதற்குத் தடை அல்ல என்பதை இன்றைய தலைமுறையினா் உணா்ந்து கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும், உடையாா்பாளையம் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் செயலருமான எம்.ஆா். ரகுநாதன் வாழ்த்திப் பேசினாா். கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் துரை.காா்த்திகேயன் வரவேற்றாா். கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினாா்.

காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் பண்ணை டி.சொக்கலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் சத்தியசீலன், வா்த்தக சங்க பொறுப்பாளா்கள் ஏ. தமிழ்ச்செல்வன், எஸ்.வி. பாண்டுரெங்கன், சிவலிங்கம், கல்லூரி முதல்வா் எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, விழாவில் பங்கேற்ற குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தருமபுரம் ஆதீனத்தின் சாா்பில் நிா்வகிக்கப்பட்டு வரும் தேவாரப் பாடசாலையை பாா்வையிட்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். தொடா்ந்து, தருமபுரம் ஆதீனத்திற்கு வந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு தருமபுரம் ஆதீனத்தின் சாா்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டு, ஆதீனத் திருமடத்தில் கொலுக்காட்சியில் அமரவைத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, தருமபுரம் ஆதீனத்தின் சாா்பில் ன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு திருக்கடையூா் அபிராமி அம்மன் படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com