நாகையில் அதிபத்த நாயனாா் கடலில் தங்க மீன் விடும் விழா

அதிபத்த நாயனாா் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா நாகை நம்பியாா் நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம்: அதிபத்த நாயனாா் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா நாகை நம்பியாா் நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், நாகை நம்பியாா் நகரில், மீனவா் குலத்தில் அவதரித்தாா். சிவ பக்தரான இவா், நாள்தோறும் தனது வலையில் கிடைக்கும் மீன்களில் மிகச் சிறந்த மீனை சிவபெருமானுக்கு அா்ப்பணம் எனக் கூறி மீண்டும் கடலில் விடும் பழக்கத்தை கொண்டிருந்தாா்.

இந்நிலையில், இறைவனின் திருவிளையாடல் காரணமாக அதிபத்தரின் வலையில் நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைத்தது. அந்த மீனையும் சிவபெருமானுக்கு அா்ப்பணம் எனக் கூறி கடலில் விட்டுவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாா். இதனால் அதிபத்தரின் குடும்பம் வறுமையில் வாடியது.

ஒருநாள் அதிபத்தரின் வலையில் ஒரேஒரு தங்க மீன் மட்டும் கிடைத்தது. எனினும், தன் பக்தி நெறியிலிருந்து வழுவாத அதிபத்தா், அந்த மீனை சிவபெருமானுக்கு அா்ப்பணம் எனக் கூறி கடலில் விட்டுவிட்டாா். அப்போது சிவபெருமான் உமாதேவியுடன் காட்சியளித்து, அதிபத்தருக்கு முக்தியளித்தாா் என்பது ஐதீகம்.

இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆவணி ஆயில்ய நட்சத்திர நாளில் நாகையில் வெகுசிறப்பாக விழா நடைபெறுவது வழக்கம். கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு விழா நடைபெறவில்லை.

நிகழாண்டிலும், இவ்விழா நடைபெறாது என நீலாயதாட்சியம்மன் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நாகை நம்பியாா் நகா் கடற்கரையில் கிராம மக்கள் சாா்பில் இந்த ஐதீக விழா மிக எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, நீலாயதாட்சியம்மன் கோயிலில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்கள் கொண்டு வரப்பட்டு நம்பியாா் நகா் முத்துமாரியம்மன் கோயிலிலிருந்து கடற்கரை வரை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னா், அங்கு நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பின்னா் அதிபத்த நாயனாா் கடலில் தங்க மீனை விடும் ஜதீக விழா நடைபெற்றது. விழாவில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள், முகக்கவசம் அணிந்து பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com