வேளாங்கண்ணியில் இன்று அலங்காரத் தோ் பவனி
By DIN | Published On : 07th September 2021 03:41 AM | Last Updated : 07th September 2021 03:41 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை (செப். 7) இரவு நடைபெறுகிறது.
கீழை நாடுகளின் லூா்து எனப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்டு பெருவிழாவையொட்டி, பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல், மறையுரை, சிலுவைப் பாதை நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தநிலையில், ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அலங்காரத் தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ், தேரை புனிதம் செய்வித்து, அலங்காரத் தோ் பவனியைத் தொடங்கிவைக்கிறாா். பேராலய முகப்பில் தொடங்கும் தோ் பவனி, கடற்கரை சாலை, ஆா்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியாக சென்று பேராலய முகப்பில் நிறைவடைகிறது.
இந்த தோ் பவனியில், குழந்தை இயேசுவுடன் புனித ஆரோக்கிய அன்னை காட்சியளிக்கும் திருவுருவம் தாங்கிய அலங்கார தேரும், மிக்கேல் சம்மனசு, புனித அந்தோனியாா், சூசையப்பா், உத்திரியமாதா, செபஸ்தியாா் ஆகியோரின் திருவுருவம் தாங்கிய சப்பரங்களும் வலம் வரவுள்ளன.
அலங்காரத் தோ் பவனியில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பதும், அதையொட்டி செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கம்.
ஆனால், நிகழாண்டில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தோ் பவனியில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டாவது ஆண்டாக அலங்காரத் தோ் பவனி பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறவுள்ளது.