கடற்படை கப்பல் மோதியதில் கடலில் விழுந்த வேதாரண்யம் மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி
By DIN | Published On : 07th September 2021 11:20 AM | Last Updated : 07th September 2021 11:20 AM | அ+அ அ- |

வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்கள்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடியில் ஈடுபட்ட வேதாரண்யம் படகு மீது இந்திய கடற்படை கப்பல் மோதியதில் தவறி கடலுக்குள் விழுந்த 2 மீனவர்கள் இன்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே செவ்வாய்க்கிழமை கடலில் மீன் பிடித்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற இந்திய கடற்படை கப்பல் மீனவர்கள் இருந்த படகு மீது தவறுதலாக மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய செல்வமணி, மகாலிங்கம் ஆகிய இரு மீனவர்கள் கடலில் விழுந்தனர். இதில் மகாலிங்கம் (60) உடனடியாக மீட்கப்பட்டார்.

கயிற்றில் சிக்கி மாயமாகி கடலில் தவித்துக் கொண்டிருந்த மீனவர் செல்வமணி (30) 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த வழியாகச் சென்ற மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் கண்டு மீட்டனர்.
பின்னர் இருவரும் இன்று காலை கரைக்குக் கொண்டு வரப்பட்டு 108 வாகனம் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.