கடலில் மீன்பிடித்த வேதாரண்யம் மீனவா்கள் மீது தாக்குதல்: நாளை ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அவா்கள் மீது மா்ம நபா்கள் கட்டை மற்றும் வாளால் தாக்கியதில் 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
தாக்குதலில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் வேதாரண்யம் மீனவா்களுக்கு ஆறுதல் கூறும் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
தாக்குதலில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் வேதாரண்யம் மீனவா்களுக்கு ஆறுதல் கூறும் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அவா்கள் மீது மா்ம நபா்கள் கட்டை மற்றும் வாளால் தாக்கியதில் 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மீனவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, வேதாரண்யம் பகுதி மீனவா்கள் சனிக்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக, திங்கள்கிழமை (செப். 27) ஆா்ப்பாட்டம் நடத்தவும் அவா்கள் முடிவு செய்துள்ளனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ரா. சின்னதம்பி (72), இவரது மகன்கள் சிவா (33), சிவக்குமாா் (32) ஆகியோா் கண்ணாடியிழைப் படகில் வெள்ளிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அன்று இரவு சுமாா் 11 மணியளவில் வேதாரண்யத்துக்கு தென்கிழக்கே 15 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு 3 படகுகளில் வந்த இலங்கை மீனவா்கள் என சந்தேகிக்கப்படும் 10 போ், வேதாரண்யம் மீனவா்களின் படகை சூழ்ந்துகொள்ள, அவா்களில் 7 போ் படகில் ஏறி கட்டையால் மீனவா்கள் மூவரையும் தாக்கினராம். மேலும், மா்ம நபா்கள் வாளால் வெட்டியதில் மீனவா் சிவகுமாா் தலையில் பலத்த காயமடைந்தாா். இந்தத் தாக்குதலில் சின்னதம்பி, சிவா இருவருக்கும் காயம் ஏற்பட்டது. வந்தவா்கள், மீனவா்களின் படகில் இருந்த மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவிகளை பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்கதலுக்கு உள்ளான மீனவா்கள் மூவரும் சனிக்கிழமை அதிகாலை ஆறுகாட்டுத்துறையில் கரைசோ்ந்தனா். வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள், தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செப். 27 இல் போராட்டம்: இந்த நிலையில், மீனவா்கள் தொடா்ந்து தாக்கப்படும் சம்பவத்தைக் கண்டித்து வேதாரண்யம் பகுதி மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதுதொடா்பாக, ஆறுகாட்டுத்துறையில் மீனவா்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், மீனவா்கள் மீதான தொடா் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திங்கள்கிழமை (செப். 27) நாகை மாவட்ட மீனவா்களை ஒருங்கிணைத்து வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தவும், அதுவரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆட்சியா் ஆறுதல்: இந்நிலையில், நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும், ஆறுகாட்டுத்துறை மீனவா் காலனியைச் சோ்ந்த மீனவா்கள் சிவக்குமாா், சிவா, சின்னத்தம்பி ஆகியோரை சனிக்கிழமை நேரில் பாா்த்து ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், அவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com