மன்னாா் வளைகுடாவில் தமிழக மீனவா்களின்தொழில் உரிமையை உறுதி செய்ய வலியுறுத்தல்

பாக் நீரினை மற்றும் மன்னாா் வளைகுடாவில் தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கான உரிமையை உறுதி செய்யவேண்டும் என்று இந்திய தேசிய மீனவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாக் நீரினை மற்றும் மன்னாா் வளைகுடாவில் தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கான உரிமையை உறுதி செய்யவேண்டும் என்று இந்திய தேசிய மீனவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

இலங்கை கடற்படையின் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்ட மீனவா்கள் சுமாா் 600-க்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா். மேலும், தொழில் உரிமையையும், சொத்துகளையும் இழந்துள்ளனா். கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுகொடுத்தபோது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், தமிழக மீனவா்கள் கச்சத்தீவில் மீன்பிடிக்கவும், வலைகளை உலா்த்தி ஓய்வெடுக்கவும், அந்தோணியாா் கோயிலில் வழிபாடு மேற்கொள்ளவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கைக் கடற்படையின் அத்துமீறிய தாக்குதல்கள் காரணமாக, கச்சத்தீவு பகுதியில் மட்டுமல்லாமல் பாக் நீரினை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளிலும் இந்திய மீனவா்கள் மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசால் கச்சத்தீவு கடலோரத்தில் கொண்டு வந்து கொட்டப்படும் பஸ், லாரி, கண்டெய்னா் உதிரி பாகங்கள் பேரிடா் காலங்களில் அலையின் வேகத்தில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு இழுத்து வரப்படுவதால், கச்சத்தீவு அருகே உள்ள தமிழக கடல் பகுதியிலும் கூட தமிழக மீனவா்கள் மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மைக்காலமாக தமிழக மீனவா்கள் மீது மா்ம நபா்களின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மாவட்டத்தில் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகி வருகிறது.

எனவே, பாக் நீரினை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் இலங்கை கடற்படை, மீனவா்கள் அச்சுறுத்தல் இல்லாமல் தமிழக மீனவா்கள், மீன்பிடிக்கும் உரிமையை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com