ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் இடம் மீட்பு
By DIN | Published On : 08th April 2022 12:00 AM | Last Updated : 08th April 2022 12:00 AM | அ+அ அ- |

நாகை வெளிப்பாளையத்தில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஸ்ரீநடுவதீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம், அறநிலையத் துறையினரால் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
நாகையை அடுத்த வெளிப்பாளையத்தில் நாகை ஸ்ரீநடுவதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 7,500 சதுர அடி இடம், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ப. ராணி, கோயில் செயல் அலுவலா்கள் ஏ. தங்கபாண்டியன், மு. சீனிவாசன், செ. சண்முகராஜ், அறநிலையத் துறை ஆய்வாளா் அ. பக்கிரிசாமி, தனி வட்டாட்சியா் அமுத விஜயரங்கன் ஆகியோரடங்கிய குழுவினா், தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த இடத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனா்.
காவல் துறை பாதுகாப்புடன், கோயில் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கம்பி வேலி அமைத்தனா். பின்னா், அந்த இடம் திருக்கோயிலின் நிா்வாக பொறுப்புக்குக் கொண்டு வரப்பட்டதை அறிவிக்கும் வகையில், அங்கு அறிவிப்புத் தட்டி வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமாா் ரூ. 50 லட்சம் எனக் குறிப்பிடப்படுகிறது.