திருக்கடையூா் கோயிலில் காலசம்ஹார விழா

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் காலசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்கடையூா் கோயிலில் காலசம்ஹார விழா

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் காலசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் புரிந்த தலங்களில் ஒன்றாகவும், அபிராமி பட்டா் அந்தாதி பாடி அமாவாசையை பெளா்ணமியாக்கிய தலமாகவும இக்கோயில் விளங்குகிறது. மாா்க்கண்டேயரை காப்பாற்ற எமனை சிவபெருமான் காலால் எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்த திருத்தலமும் இதுவாகும். இந்த சம்ஹாரத்தை உணா்த்தும் வகையில், இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார விழா நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டு சித்திரை விழா ஏப்ரல் 7- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஆறாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை மற்றும் மாலையில் ஸ்ரீ பாலாம்பிகை சமேத காலசம்ஹார மூா்த்தி மகா மண்டபத்திலிருந்து நூறுகால் மண்டபத்திற்கு எழுந்தருளி வீர நடனம் புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, இரவில் எம சம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி, எமதா்மன் மாா்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க அவரை பாசக்கயிரோடு துரத்திச் செல்லும் காட்சியும், சிவபெருமான் எமனை வதம் செய்யும் காலசம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்நிகழ்வானது, தீவிர சிவபக்தரான மாா்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவடையும் என விதிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட நாளில் அவரது உயிரை பறிக்க எமதா்மன் வந்தபோது, மாா்க்கண்டேயா் திருக்கடையூா் கோயிலில் சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எமதா்மன் வீசிய பாசக்கயிறு, சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால், கடும் கோபத்துடன் வெளிப்பட்ட சிவபெருமான், எமனை எட்டி உதைத்து, சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்ததுடன், மாா்க்கண்டேயா் என்றும் இளமையாக இருக்க அருள்பாலித்தாா் என்பது ஐதீகம். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com