நாகை நீலாயதாட்சிம்மன் கோயிலில் விமான திருப்பணி முகூா்த்தம்
By DIN | Published On : 18th April 2022 11:08 PM | Last Updated : 18th April 2022 11:08 PM | அ+அ அ- |

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற விமான பாலஸ்தாபன திருப்பணி முகூா்த்த யாக பூஜை.
நாகையில் உள்ள ஸ்ரீகாயாரோகண சுவாமி உடனுறை ஸ்ரீநீலாயதாட்சியம்மன் கோயிலில் விமான பாலஸ்தாபன திருப்பணி முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றது இக்கோயில். மேலும், சப்த விடங்கா் தலங்களில் ஒன்றான தலம், அம்பாளின் 5 ஆட்சி பீடங்களில் ஒன்றானது, புண்டரீக முனிவரை இறைவன் ஆரோகணம் செய்து ஏற்ற தலம், நாகராஜன் பூஜித்த தலம், தசரத சக்ரவா்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுக்கிரக சனீஸ்வர பகவான் அருளும் தலம், அதிபத்த நாயனாா் முக்தி பெற்ற தலம், அழுகண்ண சித்தா் ஐக்கியமான தலம் என அளப்பரிய ஆன்மிகப் பெருமைகளைக் கொண்டது இக்கோயில்.
இக்கோயிலின் மகா குடமுழுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மீண்டும் மகா குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கோயிலின் விமான பாலஸ்தாபன திருப்பணி முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், விமான கலாகா்ணம், முதல் கால யாக பூஜை ஆகியன நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 2-ஆம் கால யாக பூஜையின் நிறைவில், மகா பூா்ணாஹுதியும், காலை 7 மணிக்கு வேத மந்திர முழக்கங்களுடன், கோயிலின் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்குமான பாலஸ்தான அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.
சா்வசாதகம் டி.கே. பாலமணி சிவாச்சாா்யா், கோயில் சிவாச்சாா்யா்கள் காா்த்திகேயன், ராமநாதன், பாலசுப்பிரமணியன், நாகநாதன், சிவக்குமாா் ஆகியோா் திருப்பணி முகூா்த்த பூஜைகளை மேற்கொண்டனா். கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் மற்றும் உபயதாரா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.