பருவம் தவறிய மழையால் உளுந்து,  பச்சைப் பயறு மகசூல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

பருவம் தவறி பெய்த கன மழையால் டெல்டா மாவட்டங்களில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி மகசூல் பாதிப்புக்குள்ளாகியது.
பருவம் தவறிய மழையால் உளுந்து,  பச்சைப் பயறு மகசூல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்:  பருவம் தவறி பெய்த கன மழையால் டெல்டா மாவட்டங்களில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி மகசூல் பாதிப்புக்குள்ளாகியது. இதனால், உளுந்து, பச்சைப் பயற்றில் பழுது அதிகமானதால்,  எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக, உளுந்து,  பச்சைப் பயறு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உளுந்து, பச்சைப் பயறு செடிகள் தண்ணீர் இல்லாத ஈரப்பதத்தில் வளரக் கூடியவை என்பதால், நஞ்சை தரிசில் அதிகளவு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

தை மற்றும் மாசி மாதத்தில் பொதுவாக மழை இருக்காது. அதேவேளையில் காற்றின் ஈரப்பதம் மிகுந்து இருக்கும் என்பதால், இந்தப் பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் உளுந்து,  பச்சைப் பயறு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு, ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் ஏக்கர் பரப்பில் உளுந்து,  பச்சைப் பயறு சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். 

டெல்டா மாவட்டங்களின் உளுந்து, பச்சைப் பயறு விளைச்சல்,  இந்திய பருப்புச் சந்தையில்  தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். டெல்டா மாவட்டங்களில் விளைச்சல் அதிகமானால் தேசிய அளவில் அவற்றின் விலை குறையும். 

நிகழாண்டில் பெரிய அளவிலான தண்ணீர் தட்டுப்பாடு இல்லாததாலும், சாதகமான தட்பவெப்பத்தை எதிர்பார்த்தும் டெல்டா மாவட்டங்களில் சுமார்  10 லட்சம் ஏக்கரில் நஞ்சை தரிசில் விவசாயிகள் உளுந்து,  பச்சைப் பயறு சாகுபடி மேற்கொண்டனர். ஆனால்,  சற்றும் எதிர்பாராத விதமாக 3 முறை பருவம் தவறி பெய்த மழையால் நிகழ் பருவ உளுந்து,  பச்சைப் பயறு சாகுபடி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து 4 நாள்கள் பெய்த பலத்த மற்றும் மிதமான மழையால் உளுந்து,  பச்சைப் பயறு செடிகள் மழை நீரால் சூழப்பட்டன. அப்போது,  2 இலை பருவத்தில் உளுந்து,  பச்சைப் பயறு செடிகள் இருந்தன. பின்னர், மறுசாகுபடிக்கு இணையாக களைக்கொல்லி, இலைவழி உரம் என அனைத்து வகை பயிர் மேலாண்மை செலவுகளையும் விவசாயிகள் மேற்கொண்டனர்.

இரண்டாவது முறையாக மார்ச் மாதத்தில் பெய்த மழையும் உளுந்து,  பச்சைப் பயறு சாகுபடிக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியது. 

எனினும், விவசாயிகள் நம்பிக்கையுடன் மேற்கொண்ட சாகுபடி பணிகளால்,  உளுந்து,  பச்சைப் பயறுகள் பேரழிவிலிருந்து மீண்டு அறுவடைக்குத் தயாராகி வந்தன. ஒரு சில நாள்களில் அறுவடையாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. 

3-ஆவது முறையாக பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக, உளுந்து,  பச்சைப் பயறுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. 3 மணிநேரம் வரை ஈரத்தில் இருந்தாலே உளுந்து,  பச்சைப் பயறுகள் ஊறி, உப்பி விடும் என்ற நிலையில், 4 நாள்கள் பெய்த மழையால் உளுந்து,  பச்சைப் பயறுகள் மழை நீரில் ஊறி சேதமடைந்தன. சில பகுதிகளில் முதிர்ந்த நெற்றில் இருந்த பச்சைப் பயறுகள் நிலத்தில் உதிர்ந்து சேதமடைந்தன. மற்ற பகுதிகளில்  உப்பிய பச்சைப்  பயறுகள், நிறம் மாறி (சோடை) பழுப்பாகியுள்ளன.

இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் காவிரி தனபாலன் தெரிவித்தது: 

இந்திய சந்தையில், ஒன்றுபட்ட டெல்டா மாவட்டங்களின் உளுந்து,  பச்சைப் பயறு உற்பத்தி முக்கிய கவனம் பெறக் கூடியதாகும். இந்தநிலையில்,  நிகழாண்டில் பெய்த பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களின் பயறு  சாகுபடி பெரும் இழப்புக்கு உள்ளாகியுள்ளது.  இதனால் டெல்டா மாவட்டங்கள் மூலமான பயறு உற்பத்தியில் சுமார் 5 லட்சம் டன்னுக்கும் அதிகமான அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மழை குறுக்கீடு காரணமாக ஒரு பருவ உளுந்து, பயறு சாகுபடிக்கு, விவசாயிகள் இருமுறை சாகுபடி செலவுகளை மேற்கொண்டனர். அதனால் உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அறுவடை தருணத்தில் பெய்த மழையால் உளுந்து,  பச்சைப் பயறுகளில் பழுப்பு அதிகமாகியிருப்பதால் எதிர்பார்க்கப்பட்ட விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, பாதிக்கப்பட்ட உளுந்து,  பச்சைப் பயறு வயல்களுக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் இழப்பீடும், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் (டி.எல்.எம்.சி.) பொது பரிந்துரை அடிப்படையில், அறுவடை சோதனையின்றி உளுந்து,  பச்சைப் பயறுக்கு முழுமையான பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வருங்காலங்களில் டெல்டா மாவட்டங்களில் இவற்றின்  உற்பத்தி கேள்விக்குறியாகிவிடும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com