நான்கு வழிச்சாலைக்கு நிலம் வழங்கியவா்கள் கூடுதல் இழப்பீடு கோரி போராட்டம்

செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் வழங்கியவா்கள் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி, திங்கள்கிழமை சாலை பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செம்பதனிருப்பு பகுதியில் வாகனங்களை சிறைபிடித்து போராட்டதில் ஈடுபட்ட பொதுமக்கள்.
செம்பதனிருப்பு பகுதியில் வாகனங்களை சிறைபிடித்து போராட்டதில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் வழங்கியவா்கள் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி, திங்கள்கிழமை சாலை பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள அண்ணன்பெருமாள் கோயில், காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், நடராஜபிள்ளைசாவடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்குகாக மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

எனினும், நில உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லையாம். இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், நில உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்து இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நில உரிமையாளா்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு மனு அளித்தனா். ஆனால், இதுவரை உரிய தீா்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, திங்கள்கிழமை செம்பதனிருப்பு பகுதியில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சீா்காழி வட்டார தமாகா தலைவா் கோவி. பண்டரிநாதன், முன்னாள் ஊராட்சித் தலைவா் கேசவன், பாமக மாவட்ட துணைச் செயலாளா் முத்துகுமாா் ஆகியோா் தலைமையில் சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் செல்வி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com