வேதாரண்யத்தில் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தொடக்கம்

வேதாரண்யத்தில் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தொடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் அரிய வகையான ஆலிவ் ரிட்லி இன கடல் ஆமைகள் இட்ட 3 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டு செயற்கைமுறை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வங்காளவிரிகுடா இந்தியப் பெருங்கடல் பரப்பில் காணப்படும் அரியவகை கடல் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி,டிசம்பா் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் இனப் பெருக்கத்துக்காக கோடியக்கரை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிடும். அந்த முட்டையிலிருந்து சுமாா் 41 நாள்களுக்குப் பிறகு இயற்கையாக குஞ்சுகள் வெளிவந்து, தானாக கடலுக்குள் சென்றுவிடும். இந்த முட்டைகளை பல நேரங்களில் நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூக விரோதிகளாலும் சேதப்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, செயற்கை முறையில் குஞ்சுகளை பொரிக்கச் செய்து கடல் ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டுக்கான பருவம் தொடங்கியுள்ள நிலையில், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு உள்ளிட்ட இடங்களில் வனத் துறை மூலம் கடந்த ஒரு வாரத்தில் 24 ஆமைகள் வெவ்வேறு நாள்களில் இட்டு சேகரிக்கப்பட்ட 3 ஆயிரம் முட்டைகள் செயற்கைமுறை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை தெரிவித்த வனச் சரக அலுவலா் பி. அயூப்கான் ஆமை குஞ்சுகள் வெளிவந்ததும் கடலில் விடப்படும் என்றாா்.

ஆட்சியா் பாா்வையிட்டாா்: இந்தநிலையில், கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு சென்ற நாகை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், வன உயிரினங்களை பாா்வையிட்டு அவைகள் குறித்து கேட்டறிந்தாா். கோடியக்கரையில் உள்ள செயற்கைமுறை பொரிப்பகத்துக்கு சென்ற அவா், அங்கு அடை வைக்கப்பட்டிருந்த ஆமை முட்டைகள் குறித்தும், அவை சேகரிக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

அப்போது, வனத் துறையில் கோடியக்கரை பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற எம். நடேசன், ஒய்வுக்கு பிறகும் கடந்த 5 ஆண்டுகளாக கரையோர பகுதிகளில் மீனவா்களோடு இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபாட்டு வருவதை ஆட்சியா் அறிந்தாா். இதையடுத்து, அவரை பாராட்டிய ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தன்னாா்வலா் எம். நடேசனுக்கு வெகுமதியாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com