நாகையில் 184, மயிலாடுதுறையில் 177 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நாகை மாவட்டத்தில் 184 வாக்குச் சாவடிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 177 வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது.
நாகையில் 184, மயிலாடுதுறையில் 177 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நாகை மாவட்டத்தில் 184 வாக்குச் சாவடிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 177 வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது.

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள், கீழ்வேளூா், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 116 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு, வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.

நாகை நகராட்சியில் உள்ள 35 வாா்டுகளுக்கான வாக்குப் பதிவு 88 வாக்குச் சாவடிகளிலும், வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளுக்கான வாக்குப் பதிவு 36 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது. கீழ்வேளூா், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகளிலும் உள்ள தலா 15 வாா்டுகளுக்கான வாக்குப் பதிவு 15 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு பிற்பகல் 6 மணி வரை நடைபெறுகிறது. இதில், பிற்பகல் 5 மணி முதல் 6 மணி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப் பதிவையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் அடையாள மை, எழுதுபொருள்கள் உள்ளிட்டவற்றை தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்குச் சாவடி பணிகளில் 752 அரசுப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 6 காவல் துணைக் கண்காணிப்பாளா், 11 காவல் ஆய்வாளா்கள் உள்பட 850 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் வாக்குப் பதிவுக்காக 177 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மயிலாடுதுறை நகராட்சியில் மட்டும் 35 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு 77 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன.

மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ள நிலையில், 19-வது வாா்டு அதிமுக வேட்பாளா் அன்னதாச்சி அண்மையில் இறந்ததையொட்டி, அந்த வாா்டில் மட்டும் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவுக்காக, மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்திலிருந்து தோ்தல் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பாலு மற்றும் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் 35 வாா்டுகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி பாா்வையிட்டாா். மேலும், முன்னெச்சரிக்கையாக 16 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com