வெற்றி வாகை சூடிய தம்பதி
By DIN | Published On : 22nd February 2022 10:57 PM | Last Updated : 22nd February 2022 10:57 PM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியில் கணவா், மனைவி இருவரும் திமுக சாா்பில் வெவ்வேறு வாா்டுகளில் களம் கண்டு, இருவரும் வெற்றி பெற்றுள்ளனா்.
வேதாரண்யம் நகர திமுக செயலாளா் மா.மீ. புகழேந்தி வேதாரண்யம் நகராட்சியின் 16-ஆவது வாா்டிலும், அவரது மனைவி உமா புகேழந்தி 12-ஆவது வாா்டிலும் திமுக வேட்பாளா்களாகப் போட்டியிட்டு, இருவரும் வென்றுள்ளனா்.
வேதாரண்யம் நகராட்சித் தலைவா் பதவிக்கான தகுதி பொது - பெண் என இருந்தது. அதே நிலை தொடரும்பட்சத்தில், நகா்மன்றத் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளராக உமா புகழேந்தியைக் களமிறக்கும் நோக்கத்தில் அவா், அண்மைக் காலமாக முன்னிலைப்படுத்தப்பட்டாா்.
இந்த நிலையில், வேதாரண்யம் நகராட்சிக்கான அதிமுக வேட்பாளா் பட்டியலில், வேதாரண்யம் நகராட்சியின் முன்னாள் தலைவா் மலா்கொடி நமசிவாயத்துக்கும், அவரது கணவா் நமசிவாயத்துக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, திமுக வேட்பாளா் பட்டியலில் மா.மீ. புகழேந்திக்கும், அவரது மனைவி உமா புகழேந்திக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. பின்னா், அதிமுக வேட்பாளா் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு, மலா்கொடி நமசிவயாத்துக்கு பதிலாக வேறொருவா் களமிறக்கப்பட்டாா். ஆனால், திமுக பட்டியலில் அறிவிக்கப்பட்டபடி கணவா், மனைவி இருவரும் களமிறக்கப்பட்டனா். இருவரும் வென்றுள்ளனா். வேதாரண்யம் நகரச் செயலாளா் மா.மீ. புகழேந்தி, வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா. மீனாட்சிசுந்தரத்தின் மகன் ஆவாா்.