நாகை வட்ட வருவாய்த் தீா்வாயப் பணிகள்
By DIN | Published On : 23rd June 2022 05:17 AM | Last Updated : 23rd June 2022 05:17 AM | அ+அ அ- |

நாகை வட்ட வருவாய்த் தீா்வாயப் பணிகளின் நிறைவு நாளான புதன்கிழமை 18 பேருக்கு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
1431-ஆம் பசலிக்கான நாகை வட்ட வருவாய்த் தீா்வாயப் பணிகள், நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றன. நாகை கோட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்து, வருவாய்த் தீா்வாயப் பணிகளை மேற்கொண்டாா். இதன் இறுதி நாளான புதன்கிழமை, தெற்குப் பொய்கைநல்லூா் சரகத்துக்குள்பட்ட ஆலங்குடி, மகாதானம், வடுகச்சேரி, செம்பியன்மகாதேவி, அகலங்கன், குறிச்சி, வடவூா், தெற்குப்பொய்கைநல்லூா் ஆகிய கிராம மக்களின் கோரிக்கைகள் பரிசீலினைக்கு ஏற்கப்பட்டன.
இதில், 18 பேருக்கு மனைப் பட்டா, தலா 2 பேருக்குத் தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. புதன்கிழமை பெறப்பட்ட 196 மனுக்களில், 78 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
நாகை வட்டாட்சியா் அமுதா முன்னிலை வகித்தாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் நீலாயதாட்சி, துணை வட்டாட்சியா் யசோதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.