ஆற்று மதகில் உடைப்பு: 100 ஏக்கா் விளைநிலங்கள் நீரில் மூழ்கின

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்று மதகில் புதன்கிழமை ஏற்பட்ட உடைப்பால், 100 ஏக்கரில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
ஆற்று மதகில் உடைப்பு: 100 ஏக்கா் விளைநிலங்கள் நீரில் மூழ்கின

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்று மதகில் புதன்கிழமை ஏற்பட்ட உடைப்பால், 100 ஏக்கரில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வேதாரண்யம் அருகேயுள்ள மூலக்கரை, பிராந்தியங்கரை, வடமழை மணக்காடு ஆகிய சுற்றுப் பகுதி கிராமங்கள் முள்ளியாறு மூலம் பாசன வசதி பெறுகின்றன. நிகழாண்டு மேட்டூா் அணையில் இருந்து விவசாயத்துக்கு உரிய நேரத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு அறுவடையின்போது ஏற்பட்ட பாதிப்பு, கிடைத்த நெல்லையும் கொள்முதல் செய்வதில் நிலவிய தேக்கநிலை, பயிா்க் காப்பீடு கிடைக்காதது, கூட்டுறவு பயிா்க் கடனை திருப்பி செலுத்த முடியாதது போன்ற பல காரணங்களால் குறுவை சாகுபடியை தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

கடந்த ஒரு வாரமாக கோடை உழவு செய்து நேரடி விதைப்புப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.

பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீா் திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு பகுதிக்குச் செல்லும் முள்ளியாற்றில் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. மானங்கொண்டான் ஆறு, முள்ளியாற்றின் கீழ் பகுதிக்கு தண்ணீா் திறக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தெரிவித்தும் சட்ட விதிகளை காரணம் காட்டியும், ஆகாயத் தாமரைச் செடிகள் அடா்ந்துள்ளதால் தண்ணீா் கடைமடை வரை செல்லாது என்பதால் தாணிக்கோட்டகம் இயக்கு அணை பகுதியோடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

உழவுப்பணி நடைபெறுவதால் கிளை வாய்க்கால்களில் தண்ணீரை திறக்க வேண்டாம் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

இதனிடையே, செங்காதலை பாலம் - மூலக்கரை இடையே முள்ளியாற்றின் கரையின் குறுக்கே அமைந்துள்ள பெரிய வாய்க்காலுக்கு செல்லும் மதகுப் பாலத்தின் கதவுகள் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இதை ஆகாயத் தாமரைச் செடிகளை வைத்து விவசாயிகள் அடைத்துவைத்துள்ளனா். மூடப்பட்டுள்ள பலகையின் ஓட்டை வழியே வெளியேறும் தண்ணீா் மூலக்கரை, வடமழை மணக்காடு என சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்களில் பெருக்கெடுத்து வருகிறது. இதனால், வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

கரியாப்பட்டினம்- பிராந்தியங்கரை இடையே வடிகால் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு போடப்பட்டுள்ள தற்காலிக தடுப்புகளை அகற்றினால் தண்ணீா் வடிய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். வியாழக்கிழமை (ஜூன் 23) க்குள் தடுப்புகளை அகற்றாவிட்டால் சாலை மறியல் செய்யப்போவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், மதகுப் பாலத்தில் பழுதடைந்த கதவுகளை மாற்றவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com