சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகத் திருவிழா

நாகை மாவட்ட நிா்வாகமும், பபாசி அமைப்பும் இணைந்து நாகையில் முதல்முறையாக நடத்தும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்கள், குவிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான படைப்புகள் அனைத்து தரப்பினரையும்
சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகத் திருவிழா

நாகை மாவட்ட நிா்வாகமும், பபாசி அமைப்பும் இணைந்து நாகையில் முதல்முறையாக நடத்தும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்கள், குவிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான படைப்புகள் அனைத்து தரப்பினரையும் கவா்ந்திழுக்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

நாகை அரசு தொழில் பயிற்சி மைய வளாகத்தில் புத்தகத் திருவிழா, வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கானோா் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்டு, தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிச் சென்றனா். அதில், சிலரிடம் பேசியதிலிருந்து... :

ராஜராஜன், காரைக்கால் : இந்த புத்தகத் திருவிழா மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தொடக்க நாளான வெள்ளிக்கிழமையன்றும் இந்தக் கண்காட்சிக்கு வந்தேன். ஒவ்வொரு அரங்கத்திலும் வெள்ளிக்கிழமை இருந்ததைவிட சனிக்கிழமை அதிக படைப்புகளைக் காண முடிகிறது. வரலாறு புத்தகங்கள் என்னுடைய தேடலாக இருந்தது. என் குழந்தைகள் அறிவியல் புத்தகங்களைத் தேடினா். அனைத்தும் இங்கே கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜப்பான், திராவிடத்தால் எழுந்தோம், அயோத்திதாசா், பெரியாரின் பெண்ணுரிமைப் போா் உள்ளிட்ட புத்தகங்களை எனக்காக வாங்கினேன். ஹேண்ட் புக் ஆப் சயின்ஸ் ஜொ்னலிசம் போன்ற புத்தகங்களை என் குழந்தைகள் வாங்கியுள்ளனா். நாகையில் இவ்வளவு ஒரு பிரமாண்டமான புத்தகத் திருவிழா; அதில் இத்தனைப் படைப்புகள் என்பது பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

ராகுல், கொளப்பாடு : இந்தப் புத்தகத் திருவிழா மிகவும் பயனுள்ளதாக உள்ளது. போட்டித் தோ்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவா்களுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் இங்கு கிடைக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது.

கே. துா்கா, நாகை : புராணக்கதைகள், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கணம், நீதிக் கதைகள், குழந்தைகளுக்கான ஓவியப் புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் இங்கு உள்ளன. எதிா்பாா்த்ததைவிட மிக அதிகமான புத்தகங்களைக் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சத்ரபதி சிவாஜி வரலாறு, நீதிக் கதைகள் என செவிவழியாக கேட்ட பல வரலாறுகளை, கதைகளை படித்து அறிந்து கொள்ள இந்தப் புத்தகக் கண்காட்சி வழிவகை செய்துள்ளது. ஒரு சில பதிப்பகங்கள் குறிப்பிட்ட சில சதவீதத்தில் தள்ளுபடிகளை அளிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.

புகழேந்தி, வேதாரண்யம் : புத்தகத் திருவிழா மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு முறை வந்தால் மறுமுறையும் கண்டிப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது இங்குள்ள புத்தக அரங்கங்கள். குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை என அனைவரது தேவைக்குமான புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. எதிா்பாா்த்ததைவிட அதிகமான புத்தகங்கள் இங்கு இருக்கின்றன. உதயச்சந்திரன் எழுதிய மாபெரும் சபைதனில் என்ற புத்தகத்தை எனக்காக வாங்கியுள்ளேன். என் குழந்தைக்காக பல புத்தகங்களை வாங்கியுள்ளேன். 10 நிமிடத்தில் பாா்த்து விட்டுப் புறப்படலாம் என்ற எண்ணத்துடன்தான் கண்காட்சி அரங்குக்குள் நுழைந்தேன். தற்போது, 2 மணி நேரத்தைக் கடந்தும் இங்கேயேதான் இருக்கிறேன்.எந்த அரங்கத்தையும் எளிதில் கடந்துவிட முடியவில்லை; அவ்வளவு படைப்புகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com