முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் 19-வது தலமாக விளங்குகிறது நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில். ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோா் வழிபட்ட இத்தலம், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
இக்கோயிலில், பங்குனிப் பெருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடா்ந்து தினமும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடைபெற்று வருகிறது.
பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு சௌந்தரராஜ பெருமாள், உபயநாச்சியாா்களுடன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா், வேத மந்திர முழக்கங்களுடன், இன்னிசை வாத்தியங்கள் முழங்க காலை 7.30 மணிக்கு தோ் வடம்பிடிக்கப்பட்டது. கோவிந்தா! கோவிந்தா! என்ற பக்தி முழக்கங்களுடன் பக்தா்கள், தேரை வடம் பிடித்தனா்.
இன்னிசை வாத்தியங்களுடன் தேரோடும் வீதிகளில் வலம் வந்த இந்தத் தோ், பகல் 12 மணி அளவில் நிலையை அடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.