ஜனநாயகத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: டி.ராஜா 

ஜனநாயகத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் து. ராஜா தெரிவித்தார்.
நாகையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்திக்கும் து. ராஜா.
நாகையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்திக்கும் து. ராஜா.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் து. ராஜா தெரிவித்தார்.

நாகையில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நாகையில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழுக் கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில அரசியல் குறித்து விவாதம் நடைபெறுகிறது. மேலும், வரும் அக்டோபர் மாதத்தில் விஜயவாடாவில் நடைபெறும் தேசிய மாநாட்டையொட்டி, தமிழகத்தில் மாநில, மாவட்ட மாநாடுகள் நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதி மற்றும் சமத்துவம் காக்க தமிழக முதல்வர் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  இது தொடர்பாக, தேசிய அளவிலும் ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றுபட வேண்டும் என அவர் கடிதம் எழுதினார். அதற்கு நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம்.  

தமிழக பட்ஜெட் பலராலும் பாராட்டப்படும் பட்ஜெட்டாக உள்ளது. பெண்கல்விக்கு தமிழக அரசு அளிக்கும் முக்கியத்தும் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என இடதுசாரிகள் பல முறை வலியுறுத்தியுள்ளோம். இந்தக் கோரிக்கை அங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், தமிழக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. 
இது, பாராட்டுக்குரியது.

மத்திய அரசால் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. தமிழகத்துக்குப் போதுமான ஜி.எஸ்.டி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. பாஜக அரசு மக்கள் விரோத கொள்கைகளைக் கொண்ட அரசாக உள்ளது. 5 மாநிலத் தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வென்றுள்ளது. ஆனால், இது அக்கட்சியின் பண பலத்துக்கும், அதிகார பலத்துக்கும் கிடைத்த வெற்றிதான். உண்மையில், பாஜக மக்கள் செல்வாக்கை இழந்துதான் வருகிறது.

இந்தியாவில் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசுக்கு எதிராக கருத்து கூறும் மாணவர்கள் முலம் அறிஞர்கள் வரை பலதரப்பட்டவர்களும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். 
கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாக உள்ளது பாஜக அரசு. பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் தீவிரமாக உள்ளது மத்திய அரசு. 

இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியலமைப்பு சட்டத்தை, கூட்டாட்சி தத்துவதைப் பாதுகாக்க, மதச்சார்பற்ற கட்சிகள், இயக்கங்கள் தேசிய அளவில் ஒன்றுபட வேண்டும். வரும் 2-ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி வருகிறார். வாய்ப்பிருப்பின் அப்போது, அவரை சந்தித்து இது தொடர்பாக பேசப்படும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை. 

தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும்,  போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்தப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார். 

நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் எம். செல்வராஜ், கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கோ. பழனிச்சாமி, சி. மகேந்திரன், நாகை மாவட்டச் செயலாளர் எஸ். சம்பந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com