முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
சீர்காழி கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: கொட்டும் மழையிலும் சாமி தரிசனம்
By DIN | Published On : 13th May 2022 01:02 PM | Last Updated : 13th May 2022 01:02 PM | அ+அ அ- |

சீர்காழி: சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் பகுதியில் 104 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சட்டநாதபுரம் கிராமத்தில் ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன. 104 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன. 11ஆம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன.
இதனையெடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கல இசை முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத சர்வசாதகம் திருக்கோலக்கா கார்த்தி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
காலை முதல் மழை பெய்த போதும் அதனை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.