சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சீர்காழி அருகே தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பலியானர்.
சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சீர்காழி: சீர்காழி அருகே தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பலியானர்.

சீர்காழி அடுத்த அல்லிவிளாகம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி (52) கூலி தொழிலாளி. இவர் அருகில் காத்திருப்பு கிராமத்தில் விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் அமைத்துள்ள பிளான்ட் வளாகத்தில் இன்று காலை அங்கு கிடக்கும்  பழைய  பாட்டில்களை   சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த நிறுவன வளாகத்தில் சுமார் 100 பேர் தங்கியுள்ள இரும்பு கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு வயர் ஜாயின்ட் முறையாக கொடுக்கப்படாததால் அதன்மூலம் அங்கு அருகில் இருந்த எர்த்  கம்பியில் மின்சாரம்  பாய்ந்து உள்ளது. இதனை அறியாத ரவி கம்பி அருகே பாட்டில்களை சேகரித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இது குறித்து அறிந்த ரவியின் மனைவி, மகள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். தகவலறிந்த செம்பதனிருப்பு ஊராட்சி  தலைவர் லட்சுமி முத்துக்குமரன், காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து விரைந்து வந்தனர். இது குறித்து அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். 

தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பாதுகாப்பற்ற முறையில் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், நிறுவன வளாகத்தில் ஆங்காங்கே மின்சாரம் செல்லும் வயர்கள்  பாதுகாப்பற்ற முறையில் தோங்கி  கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர். 

நெடுஞ்சாலையிலிருந்து பிளான்ட் பிரிந்து செல்லும் பகுதி சேரும், சகதியுமாக இருப்பதால் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள்  விழுந்து விபத்து ஏற்படுவதாகவும்  குற்றஞ்சாட்டினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனியார் நிறுவனம் முறையான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இல்லையென்றால்  இப்பகுதியில் நிறுவனத்தை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் கூறினார். 

இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனியார் நிறுவன இழப்பீடு வழங்கக்கோரி கிராம மக்கள் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சீர்காழி டி.எஸ்.பி. லா மெக் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சாலையில் தற்காலிக பந்தல் அமைத்து தொடர்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com