சேத்தூரில் புதிய தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டம்
By DIN | Published On : 05th November 2022 09:53 PM | Last Updated : 05th November 2022 09:53 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் சேத்தூா் ஊராட்சியில் புதிய தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நாற்று நடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சேத்தூா் ஊராட்சி மஞ்சக்கொல்லை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில் நடந்து செல்லமுடியாத அளவுக்கு உள்ளது.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடமும் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் சாலை முழுவதும் குண்டும் , குழியுமாகவும், சேறும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
இந்த சாலையை சீரமைப்பதோடு, விரைவில் புதிய தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சாலையில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு இந்தியா ஜனநாயக வாலிபா் சங்க கிளைத் தலைவா் மதிவாணன் தலைமை வகித்தாா்.