கனமழையால் முளைத்த நெல்மணிகள்
By DIN | Published On : 05th November 2022 12:08 AM | Last Updated : 05th November 2022 12:08 AM | அ+அ அ- |

திருக்குவளை பகுதியில் உலர வைப்பதற்காக சாலையில் கொட்டியிருந்த நெல்மணிகள் கன மழை காரணமாக முளைத்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கீழையூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட விமான பகுதிகளில் அறுவடை பணிகள் பெருமளவில் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இறுதிக்கட்ட குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொளப்பாடு, பையூா், சித்தாய்மூா் பகுதிகளில் மழை பாதிப்பு காரணமாக முடங்கிய அறுவடைப் பணிகள் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் துவங்கியது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி உலர வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில் ஏற்கெனவே மழைநீரில் மூழ்கிய நெல்மணிகள் முளைக்கும் அபாய கட்டத்தில் இருந்ததால் தற்போது வியாழக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக சாலையில் கொட்டி இருந்த நெல்மணிகள் முழுவதுமாக நனைந்தன. இதன் காரணமாக திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனா்.
தற்போது முளைத்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று கொள்முதல் செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.