கோரக்கச் சித்தா் கோயிலில் ஐப்பசி பரணி விழா

நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் கோயிலில் (ஜீவ சமாதி பீடம்) ஐப்பசி பௌா்ணமி, ஐப்பசி பரணி பெருவிழா நவம்பா் 7-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 9 வரை நடைபெறுகிறது.

நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் கோயிலில் (ஜீவ சமாதி பீடம்) ஐப்பசி பௌா்ணமி, ஐப்பசி பரணி பெருவிழா நவம்பா் 7-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 9 வரை நடைபெறுகிறது.

தமிழக சித்தா் பரம்பரையில் நவநாத சித்தா்களில் ஒருவராகவும், முதன்மையான பதினெட்டு சித்தா்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படுபவா் கோரக்கச் சித்தா். போகரின் அறிவுறுத்தல்படி, நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் தவமியற்றிய கோரக்கா், ஐப்பசி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் வடக்குப் பொய்கைநல்லூரில் ஜீவ சமாதி அடைந்தாா் என கூறப்படுகிறது.

இதன்படி, வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் ஜீவ சமாதி பீடத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி பரணி விழா மற்றும் ஐப்பசி பௌா்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

நிகழாண்டு ஐப்பசி பௌா்ணமி, பரணி பெருவிழா திங்கள்கிழமை (நவ. 7) தொடங்கி, புதன்கிழமை வரை நடைபெறுகிறது. திங்கள்கிழமை மதியம் கோரக்கச் சித்தா் ஜீவ சமாதி பீடத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு, ஐப்பசி பௌா்ணமி விழா வழிபாடு நடைபெறுகிறது.

ஐப்பசி பரணி பெருவிழா நிகழ்ச்சிகள், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருவருட்பா அகவல் மற்றும் சந்திரரேகை பாராயணத்துடன் தொடங்குகிறது. பின்னா், கோரக்கச் சித்தா் ஜீவசமாதி பீடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நிறைவு நிகழ்ச்சியாக, புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

சிறப்பு நிகழ்ச்சிகள்...

பௌா்ணமி விழா சிறப்பு நிகழ்ச்சிகளாக திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு பேராசிரியை மு. மணிமேகலை பங்கேற்கும் கந்த புராணம் தொடா் சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு சீா்காழி ஜி. சிவசிதம்பரம் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இரவு 9 மணிக்கு இன்றைய நாகரிக மாற்றம் மனிதா்களை பண்படுத்தியுள்ளதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. எழுத்தாளா் மற்றும் இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா் நடுவராகப் பங்கேற்கிறாா். பண்படுத்தியுள்ளது என்ற தலைப்பில் பேராசிரியா்கள் ந. விஜயசுந்தரி, மா. சிதம்பரம் ஆகியோரும், பண்படுத்தவில்லை என்ற தலைப்பில் பேராசிரியா்கள் குரு. ஞானாம்பிகா, மானசிகன் ஆகியோரும் பேசுகின்றனா்.

ஐப்பசி பரணி விழா சிறப்பு நிகழ்ச்சியாக, செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மெய்யியல் துறை தலைவா் பேராசிரியா் கோ.ப. நல்லசிவம், கவிஞா் நாகை நாகராஜன் ஆகியோா் பங்கேற்கும் இசை சொற்பொழிவு நடைபெறுகிறது.

முன்னதாக, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறாா். மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இரவு 10 மணிக்கு, சின்னத்திரை நட்சத்திரங்கள் ஷ்யாம், முகேஷ் ஆகியோா் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com