கோடியக்கரைக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை அதிகரிப்பு
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

கோடியக்கரை பகுதியில் காணப்படும் செங்கால் நாரைகள்.
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவரும் நிலையில், கோடியக்கரைக்கு வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வன உயிரின பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இந்த சரணாலயத்துக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம்கூட்டமாக வந்து, மழைக்காலம் நிறைவடையும் வரை தங்கிச் செல்வது வழக்கம்.
ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 247 வகை பறவை இனங்கள் வந்து செல்வதாகவும், இதில் பூநாரைகள் மட்டும் பல்லாயிரக் கணக்கில் வருகைதரும் என்று பறவையின ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கோடியக்கரை பகுதியில் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மழையளவு குறைவு, இரை தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பறவைகளின் வருகை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்துவரும் மழை காரணமாக, நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, சரணாலயத்துக்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
பூநாரைகள், கூழக்கிடா, செங்கால் நாரை போன்ற பறவைகள் அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கியுள்ளன. கடல் காகம், மெலிந்த மூக்கு கடல் ஆலாக்கள், சிறவி போன்ற பறவைகளையும் கோடியக்கரை சரணாலயப் பகுதியில் ஆயிரக்கணக்கில் காணமுடிகிறது.
தற்போது, கோடியக்கரை பம்செட், கோவைத்தீவு, நெடுந்தீவு, சிறுதலைக்காடு போன்ற இடங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வலசை வருகின்றன. இதனால் பறவை ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.