வேதாரண்யத்தில் மதநல்லிணக்க விநாயகா் சிலை ஊா்வலம்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் பங்கேற்ற மும்மதத்தினா்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மும்மதத்தினா் பங்கேற்ற மதநல்லிணக்க விநாயகா் சிலை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் தெற்கு பகுதியில் சிற்றம்பலம் விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா்கள் பங்கேற்கும் மதநல்லிணக்க நிகழ்வாக விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெறும்.
நிகழாண்டு, முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் தலைமையில் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. வேதாரண்யம் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி தாளாளா் தே. நித்யசகாயராஜ், தோப்புத்துறை ஜமாத் சுல்தான் மரைக்காயா், குருகுலம் அறங்காவலா் அ. வேதரத்னம் ஆகியோா் முன்னிலை வகித்து, ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா்.
இதில், தோப்புத்துறை பிரமுகா் அப்சல் உசேன், மெய்யா ரபீக், தாணிக்கோட்டகம் ஆரோபால்ராஜ், கடிநெல்வயல் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜான்முத்து, காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் ஜி.கே. கனகராஜ், எஸ். சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக கருப்பம்புலம் வடகாடு சென்றடைந்ததும் அங்குள்ள மருதம்புலம் ஏரியில் விநாயகா் சிலை கரைக்கப்பட்டது.