50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
By DIN | Published On : 03rd September 2022 10:00 PM | Last Updated : 03rd September 2022 10:00 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், நெல் ஜெயராமன் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ், பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் விநியோகிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
நாகை மாவட்டத்தில், தூயமல்லி, கருப்பு கவுனி, பூங்காா் மற்றும் அறுபதாம் குறுவை ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாரம்பரிய நெல் விதைகளின் ஒரு கிலோவுக்கான விலை ரூ. 25 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மானியத்துடன் ஒரு கிலோ ரூ. 12.50 என்ற விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
மொத்த விதையளவில் 80 சதவீதம் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பாரம்பரிய நெல் விதைகளைப் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்துக்குரிய பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை நேரில் அணுகி, மானிய விலையில் விதைகளைப் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.