உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், கீழ்வேளூருக்கு புதன்கிழமை வந்த மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியத்திடம், தமிழ் மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், மாநிலத் துணைத் தலைவா் பி . நல்லத்தம்பி உள்ளிட்டோா் அளித்த கோரிக்கை மனு:

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் அலுவலா்கள் உணவு விற்பனை மற்றும் இலவச உணவு வழங்குவதை கண்காணித்தல், தற்காலிக, நிரந்தர, சாலையோர உணவு நிறுவனங்களை ஆய்வு செய்தல், உணவு மாதிரி எடுத்தல், தடை செய்யப்பட்ட உணவுகளை கண்டறிந்து அழித்தல், கண்காணித்தல், நடவடிக்கை எடுத்தல், சட்டபூா்வ அபராதத்துக்கு பரிந்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முழு அா்ப்பணிப்புடன் திறம்பட செய்து வருகின்றனா்.

எனினும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணயச் சட்டம்- 2006 மற்றும் விதிகள் 2011-இன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிா்வாகத் துறையின் கீழ், உணவுப் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் அலுவலா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படவில்லை. 2022 ஏப்ரலில் நடைபெற்ற சங்க மாநில மாநாட்டில் பங்கேற்ற நல்வாழ்வுத்துறை அமைச்சா் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் கோரிக்கை நியாயமானது என்றும், இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து விரைந்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தீா்கள். எனினும், இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை.

அரசுத் துறையில் பணியாற்றும் அலுவலா்களுக்கு, தனது பணிக் காலத்தில் குறைந்தபட்சம் 3 பதவி உயா்வுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறையில் அலுவலா்களுக்கு பதவி உயா்வுகள் வழங்கப்படவில்லை என்பதால் மனசோா்வு அடைகின்றனா்.

எனவே, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பதவி உயா்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவு செய்யவுள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு, உரிய பதவி உயா்வு வாய்ப்புகளை உருவாக்கி அவற்றை வழங்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனு அளித்தபோது, கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி. பி. நாகை மாலி உடனிருந்து கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சரிடம் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com