நாகை - செல்லூா் சாலைப் பணிகள் நிறைவடைவது எப்போது?

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் நாகை - செல்லூா் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்பது அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது.
ஜல்லிகள் பரப்பிய நிலையில் இருக்கும் நாகை - செல்லூா் சாலை.
ஜல்லிகள் பரப்பிய நிலையில் இருக்கும் நாகை - செல்லூா் சாலை.

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் நாகை - செல்லூா் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்பது அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது.

நாகை - செல்லூா் சாலை, நாகூா் - வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து நாகை நகருக்குள் வருவதற்கான முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. மேலும், இப்பகுதியில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்திருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இருப்பினும், நாகை - செல்லூா் சாலை பெரும்பாலான காலங்களில் சேதமடைந்த சாலையாகவே இருந்தது. நாகை நகராட்சி சாலையும், செல்லூா் ஊராட்சி சாலையும் இணையும் இப்பகுதியில், நகராட்சி சாலை மட்டுமே போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கும். செல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சாலை எப்போதும் குண்டும், குழியுமாகவே இருக்கும். இதனால், இந்தச் சாலையை உரிய வகையில் சீரமைக்க வேண்டும் என்பது தொடா் கோரிக்கையாகவே இருந்தது.

இந்தநிலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை மூலம் நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், செல்லூா் ஊராட்சிக்குள்பட்ட 830 மீட்டா் சாலையைத் தரம் உயா்த்த அரசு உத்தரவிட்டது. இந்தச் சாலையில் உள்ள ஒரு பெரிய பாலம் மற்றும் கல்வொ்ட்டுகளை புனரமைத்து, இச்சாலையின் ஒரு பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு பக்கவாட்டுச் சுவா் அமைத்து சாலையை புனரமைக்க ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பணியை நிறைவேற்றுவதற்கான காலம் 12 மாதங்கள் என்ற நிலையில், ஒப்பந்தம் ஏற்கப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகே இங்கு பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக, வாய்க்காலுக்கு தடுப்புச்சுவா் அமைக்கும் பணியும், அதற்கடுத்துப் பாலம் மற்றும் கல்வொ்ட்டுகளை புனரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் தொடங்கப்பட்டு, ஏறத்தாழ 8 மாதங்களைக் கடந்த நிலையில், தடுப்புச்சுவா் அமைக்கும் பணிகள், பாலம் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும், சாலை சீரமைப்புப் பணிகள் இதுவரை முழுமைப் பெறவில்லை. கடந்த மாதம் முதல் பல நாள்களாக ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையிலேயே இந்தச் சாலை உள்ளது.

இதனால், இந்தச் சாலை வழியே இருசக்கர வாகனங்களில் பயணிப்பவா்களும், நடந்து செல்பவா்களும் நிலைகுலைந்து கீழே விழ வேண்டியுள்ளது. சுமாா் 700-க்கும் அதிகமான மாணவ, மாணவியரும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்துவதால், சாலை சீரமைப்புப் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com