நெல் மூட்டைகளுடன் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்

கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்களில் வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்.

திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்களில் வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 45 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான விவசாயிகள் ஆா்வத்துடன் குறுவை சாகுபடி மேற்கொண்டனா்.

திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட இறையான்குடி, தெற்குப்பனையூா், வடக்குப்பனையூா், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை மூட்டைகளாக கட்டி இறையான்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருக்க நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கொள்முதல் நிலைய வளாகம் முழுவதும் நெல் மூட்டைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவமழை தொடங்கினால் நெல் மணிகள் முளைத்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்.

அதனால் பூட்டி கிடக்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகங்களில் இரவு பகலாக நெல்மூட்டைகளை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். குறுவைக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பதில் தமிழக அரசு காட்டிய அக்கறையை கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் கொள்முதல் செய்வதிலும் காட்ட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com