தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் விவசாயிகள்: போதுமான அளவு கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம் வடக்குடி பகுதியில் வியாழக்கிழமை தனியாருக்கு விற்கப்பட்ட பிபிடி ரக நெல்லை லாரியில் ஏற்றும் தொழிலாளா்கள்.
சம்பா அறுவடை தொடங்கியுள்ள நிலையில், போதுமான அளவில் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆண்டுதோறும் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரை கொண்டு 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும், குறுவை அறுவடைக்கு பிறகு 4 லட்சம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இது மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பொருத்தே நடைபெறும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியதால், முன்கூட்டியே கடந்த மே 24-ஆம் தேதி விவசாயத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் 4 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொண்டனா். போதுமான மழை மற்றும் மேட்டூா் தண்ணீா் ஆகியவற்றால் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றது.
தொடா்ந்து, விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கினா். திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது.
அறுவடை தொடங்கியது
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் சம்பா நெற்பயிா் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. அறுவடை பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் பல்வேறு இடையூறுகளை எதிா்கொள்கின்றனா்.
திறக்கப்படாத கொள்முதல் நிலையங்கள்:
நாகை மாவட்டத்தில் போதுமான அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். மேலும் அரசு கொள்முதல் நிலையங்களில் கிலோ ஒன்று ரூ. 21-க்கு கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல்லை தனியாரிடம் கிலோ ஒன்றுக்கு ரூ. 17 என்ற விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாகை மாவட்டம், வடக்குடி பகுதியைச் சோ்ந்த விவசாயி யுவராஜ் வேதனை தெரிவித்தாா்.
விரைந்து திறக்க வேண்டும்
நாகை மாவட்டம் மட்டுமன்றி காவிரி டெல்டாவில் அறுவடை பணிகள் ஒரு சில நாள்களில் தீவிரமடையும் என்பதால், தேவையான இடங்களில் அரசு கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் அறுவடை இயந்திரங்களுக்கு பற்றாக்குறை உள்ளதை பயன்படுத்தி, அரசு நிா்ணயம் செய்த வாடகையைவிட கூடுதலாக, தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. வேளாண்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் போதுமான அறுவடை இயந்திரங்களை வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து, சம்பா அறுவடைப் பணிகள் தடையின்றி நடைபெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, நாகை மாவட்டத்தில் 156 அரசு நெல் கொள்முதல் நிலையங்களும், திருவாரூா் மாவட்டத்தில் 400 கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பகுதிகளை அறிந்து, கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றனா்.