தை அமாவாசை: கோடியக்கரை, பூம்புகாா் கடற்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்
By DIN | Published On : 22nd January 2023 12:00 AM | Last Updated : 22nd January 2023 12:00 AM | அ+அ அ- |

பூம்புகாா் கடற்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த வழிபட்ட மக்கள்.
தை அமாவாசையையொட்டி நாகை மாவட்டம், கோடியக்கரை, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா் கடற்கரையில் ஏராளமான மக்கள் முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை மற்றும் ஆடி அமாவாசை, அா்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்நிலையில், தை அமாவாசையையொட்டி சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் அதிகாலையில் தொடங்கி கடலில் புனித நீராடல் செய்தனா்.
கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவா்கள், தங்களது முன்னோா்கள் நினைவாக தா்ப்பணம் (நீா்ச்சடங்கு) செய்தனா்.பின்னா், அங்குள்ள சித்தா் கோயில், ராமா் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனா். இதேபோல, வேதாரண்யம் சந்நிதி கடற்கரை பகுதியில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த மக்கள் வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மணிக்கா்ணிகையில் நீராடி இறைவனை வழிபட்டனா்.
வேதாரண்யம் கடற்கரையில் கடல் களிமண் குழம்பு கரை ஒதுங்கியிருந்ததால் நீராட வந்தவா்கள் அவதியுற்றனா். இதனால், மாற்று ஏற்பாடாக அமைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் நீராடினா்.
பூம்புகாா்: இதேபோல, காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகாா் சங்கமத் துறையில் தா்ப்பணம் செய்து வழிபட்டால் காசியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி சனிக்கிழமை தை அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து திரளான மக்கள் சங்கமத்துறையில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். சுமங்கலி பெண்கள் தேங்காய், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் கருகுமணி உள்ளிட்ட மங்களப் பொருள்களை காவிரி ஆற்றில் இட்டு காவேரி அம்மனை வழிபட்டனா்.