மாா்ச் 1-இல் தில்லி நோக்கி விவசாயிகள் யாத்திரை: பி.ஆா்.பாண்டியன்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் பி.ஆா். பாண்டியன்.
நாகப்பட்டினம்: மத்திய அரசை கண்டித்து, குமரியிலிருந்து - புதுதில்லிக்கு மாா்ச் 1-இல் விவசாயிகள் யாத்திரை நடைபெறவுள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கூறினாா்.
நாகையில் அச்சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த மத்திய அரசு, அதற்கான நடவடிக்கைகளை இதுவரை எடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளையே மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. அரிசி மிகை உற்பத்தி காலத்தில், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை விதித்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து, மாா்ச் 1-ஆம் தேதி குமரியில் இருந்து விவசாயிகள் யாத்திரையாக புதுதில்லி செல்லவுள்ளனா். தொடா்ந்து மாா்ச் 21-ஆம் தேதி புதுதில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
புதுதில்லி நோக்கி நடைபெறவுள்ள யாத்திரையில் தமிழக விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக இடம்பெறும் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு கிடையாது என்றாா் அவா்.