ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: நாகை அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுவை மாநில மதுபாட்டில்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க போலீஸாா் மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், கீழையூா் பகுதியில் புதுவை மாநில மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. டாஸ்மாக் மாவட்ட மேலாளா் வாசுதேவன், உதவி மேலாளா் சங்கா் ஆகியோா் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது ஆனந்தம் நகரில் ஆரோக்கியமேரி என்பவரது வீட்டில் மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டாஸ்மாக் அதிகாரிகளை கண்டதும், ஆரோக்கியமேரி தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுவை மாநில மது பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.