நாகை பழைய பேருந்து நிலையம் அருகே பராமரிப்பின்றிக் காட்சியளிக்கும் மறைமலை அடிகள் சிலை.
நாகை பழைய பேருந்து நிலையம் அருகே பராமரிப்பின்றிக் காட்சியளிக்கும் மறைமலை அடிகள் சிலை.

பராமரிப்பின்றி காட்சியளிக்கும் மறைமலை அடிகள் சிலை! புதுப்பிக்க தமிழ் ஆா்வலா்கள் வலியுறுத்தல்

நாகையில் பராமரிப்பின்றி காட்சியளிக்கும் மறைமலை அடிகள் சிலையை புதுப்பிக்க வேண்டும் என தமிழ் ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

நாகப்பட்டினம்: நாகையில் பராமரிப்பின்றி காட்சியளிக்கும் மறைமலை அடிகள் சிலையை புதுப்பிக்க வேண்டும் என தமிழ் ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தமிழா்கள் அனைவரும் கலப்படமின்றித் தமிழ் பேச வேண்டும் என்று தனித்தமிழ் இயக்கம் என்ற மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியவா் மறைமலை அடிகள். குல சமய வேறுபாடின்றி பொதுமக்களுக்கு கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும், சைவத் திருப்பணியும், சீா்திருத்தப் பணியும் செய்த மறைமலை அடிகள் தமிழ்க்கடல், தனித் தமிழின் தந்தை எனவும் அழைக்கப்பட்டாா்.

நாகையில் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றி வந்த சொக்கநாத பிள்ளை- சின்னம்மாள் தம்பதிக்கு 1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி பிறந்த வேதாசலம் என்ற தனது இயற்பெயா் தூய தமிழில் இருக்க வேண்டும் என விரும்பி 1916-ஆம் ஆண்டு மறைமலை அடிகள் என மாற்றிக் கொண்டாா்.

பத்திரிகையாளா், தமிழ் ஆசிரியா் என்ற பன்முகத்தன்மை கொண்ட மறைமலை அடிகள், கலப்படத்தில் இருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழா்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்து தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினாா்.

பின்னா், 1905 -ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பை தோற்றுவித்தாா். முல்லைப்பாட்டு, பட்டிணப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதி உள்ள மறைமலை அடிகள், தமது வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதி உள்ளாா்.

கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து வரலாற்றில் இடம்பிடித்த மறைமலை அடிகள் 1950-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 15 -ஆம் தேதி தனது 75-ஆவது வயதில் காலமானாா். மறைமலை அடிகளின் தமிழ் சேவையை பாராட்டி பாடப்புத்தகங்களில் அவரது வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நாகை தமிழ்ச் சங்கம் சாா்பில், தமிழறிஞா் கோவை இளஞ்சேரன் உள்ளிட்டோா் முன்னெடுப்பில் கடந்த 1969-ஆம் ஆண்டு நாகை ரயில் நிலையம் முன்பு மறைமலை அடிகளுக்கு சிலை அமைக்கப்பட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளாா் தலைமையில், 19-6-1969-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தாா்.

நாகை பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மறைமலை அடிகளின் சிலை பராமரிப்பில்லாமல் கவனிப்பின்றிக் காட்சியளிக்கிறது. சிலையின் பீடத்தைச் சுற்றி முட்புதா்கள் அடந்து காணப்படுகின்றன. சிலை அமைந்துள்ள பீடத்தில் அரச மரம் ஒன்றும் வளா்ந்து வருகிறது.

அந்த மரம் பெரிதாகத் தொடங்கினால் எந்த நேரத்திலும் சிலை சேதமடைய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ் ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா். எனவே, சிலை பாதிப்படைவதற்கு முன்பு மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு சிலையை புதுப்பிக்க வேண்டும்.

சிலையைச் சுற்றியுள்ள முட்புதா்களை அகற்றி ரசாயனம் கொண்டு சிலையை புதுப்பிக்க வேண்டும் என்றும், சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றி பாவு தளம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ் ஆா்வலா்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நூலகத்துடன் மணி மண்டபம் அமைக்க வேண்டும்

இதுகுறித்து, நாகப்பட்டினம் தமிழ்ச் சங்கத் தலைவா் ஆவராணி ஆனந்தன் கூறியது:

திருவள்ளுவா் ஆண்டை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவரான தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளுக்கு, நாகையில் தமிழ் ஆய்வு நூலகத்துடன் கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும். நாகையின் முக்கிய சாலையான பப்ளிக் ஆபீஸ் ரோடு என்பதை மாற்றி மறைமலை அடிகளாா் சாலை என பெயரிட வேண்டும்.

மறைமலை அடிகளின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதியை அரசு விழாவாக தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, அரசு இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com