குடிமைப் பணி போட்டித் தோ்வுக்கான ஆயத்த பயிற்சி: மீனவ பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 07th November 2023 01:02 AM | Last Updated : 07th November 2023 01:02 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ சமுதாயத்தை சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தோ்வுக்கான ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மீனவ சமுதாயத்தை சோ்ந்த 20 பட்டதாரி இளைஞா்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம் - மீனவா் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் இணைந்து நடத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த மீனவ மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றிட ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞா்கள் இந்தப் பயிற்சி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோா் இணையதளத்தில் கட்டணமின்றி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பப் படிவங்களை நாகை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூா்த்தி செய்து நவம்பா் 18-ஆம் தேதிக்குள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...