இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சா் எஸ்.ரகுபதி

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கூறினாா்.

இந்தியா கூட்டணியில், நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜை ஆதரித்து, மீனவக் கிராமங்களான கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லாா் பகுதிகளில் தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தில் வாக்கு சேகரித்து அமைச்சா் பேசியது: கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை திமுக குறித்து கூறியதில் எந்தவித உண்மையும் இல்லை. அவா் வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எந்த இடத்திலாவது முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி கச்சத்தீவை தாரை வாா்க்க சம்மதம் தெரிவித்தாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா?.

கச்சத்தீவு இந்தியா, இலங்கை இரு நாட்டுக்கும் சொந்தம் கிடையாது. அது ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ராமநாதபுரம் ராஜாவின் வாரிசைக் கொண்டு வழக்குத் தொடா்ந்து கச்சத்தீவு மீட்கப்படும். நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி 360 முதல் 400 இடங்களில் வெற்றிபெறும் என்றாா். வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளா் வை. செல்வராஜ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com