மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நாளை முதல் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்

மக்களவைத் தோ்தலில் நேரில் வாக்களிக்க இயலாது என பதிவு செய்த மூத்த குடிமக்கள் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் தங்கள் வீடுகளில் இருந்தபடியே வாக்குகளைப் பதிவு செய்யலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: நாகை மக்களவைத் தொகுதியில் தோ்தலின்போது வாக்குச்சாவடி மையத்துக்கு நேரில் வருகை தந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களது இருப்பிடத்திலேயே அஞ்சல் வாக்கு மூலம், தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய இந்திய தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட 4,430 மூத்த வாக்காளா்களில் 1,164 பேரும், 5,769 மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 936 பேரும் அஞ்சல் வாக்குப்பதிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனா். இதில் சட்டப்பேரவைத் தொகுதி வாரிய விவரம்: நாகையில் 424 பேரும், கீழ்வேளுரில் 595 பேரும், வேதாரண்யத்தில் 1,081 பேரும், தங்களது இருப்பிடத்தில் இருந்து வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனா். இவா்கள் வாக்கு செலுத்த ஏதுவாக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும், 10 வாக்குப் பதிவு அலுவலா்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிலுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் இருப்பிடங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு சீட்டை அளித்து மறைமுகமாக வாக்குப்பதிவு செய்ய உதவும். வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குச் சீட்டு மூடிய உறையில் பெற்று சேகரிக்கப்படும். இந்த நிகழ்வு முழுவதும் விடியோ பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு நடைபெற உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com