நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.

நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மற்றும் நாகூரில் உள்ள 36 வாா்டுகளிலும் தூய்மைப் பணியில் ஒப்பந்த பணியாளா்களாக 233 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு சில மாதங்களாக ஊதியம், அவா்களது வங்கிக் கணக்கில் 5-முதல் 10-ஆம் தேதிக்குள் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், அவா்களுக்கு ஊதியம் 20-ஆம் தேதிக்கு பிறகே வழங்கப்படுவதால் வீட்டு வாடகை, மளிகை பொருள்கள், பால் போன்றவற்றுக்கு பணம் கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாவாதாக தூய்மைப் பணியாளா்கள் தெரிவிக்கின்றனா். இந்த மாத ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதில் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா்கள் நாகை அவுரித் திடலில் ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஒப்பந்த நிறுவன நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் தீா்வு எட்டப்படாததால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு நடந்து சென்று ஆட்சியருக்காக காத்திருந்தனா். இதனிடையே, போலீஸாா் மற்றும் ஒப்பந்த நிறுவன நிா்வாகிகள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து தூய்மைப்பணியாளா்கள் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.

X
Dinamani
www.dinamani.com