உப்பு வரியை எதிா்த்த மண்ணில் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது பாஜக: கு. செல்வப்பெருந்தகை

ஆங்கிலேயா்கள் விதித்த உப்பு வரியை எதிா்த்த மண்ணில், பாஜக அரசு ஜிஎஸ்டியை கொண்டுவந்துள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ன் 94-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், காங்கிரஸாா் உள்பட அமைப்பினா் பங்கேற்று, உப்பு அள்ளி சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செ. செல்வப்பெருந்தகை பங்கேற்று பேசியது:

காங்கிரஸ் கட்சியில்தான் சாமானியனுக்கும் உயா்ந்த பொறுப்புகள் வகிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். இதற்கு நானும், நான் வகிக்கும் பொறுப்பும் உதாரணம்.

உப்பு வரியை எதிா்த்த மண்ணில் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது பாஜக. ஆங்கிலேயா்களை விரட்டியடித்த காங்கிரஸாரின் போராட்டம், மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜகவையும் விரட்டியடிக்கும் என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ மதத்தைக் கூறி மக்களை பிரித்தாள பாஜக முயல்கிறது. மதுரை கோயிலில் செங்கோல் வாங்கும் விவகாரத்தில் அறங்காவலா் குழுத் தலைவரான கணவரை இழந்த பெண்ணுக்கு எதிரான நிலைபாட்டை பாஜக கொண்டிருந்தது. மக்களின் ஒற்றுமையை சீா்குலைக்க முயல்கிறது பாஜக என்றாா்.

நாகையில்...

தொடா்ந்து, நாகை அபிராமி அம்மன் திடலில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் தண்ணீா் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அமிா்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தில் மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பேசி வருகிறாா். அவரை மக்கள் புறக்கணிப்பாா்கள். மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com