கோடை இறவை உளுந்து சாகுபடிக்கான உரமேலாண்மை

கோடை இறவை உளுந்து பயிா் சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய உர மேலாண்மை குறித்து கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வா் கோ. ரவி மற்றும் மண்ணியல் துறை பேராசிரியா் அனுராதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

உளுந்து பயரில் உயா் விளைச்சலை அதிகரிக்கும் தொழில் நுட்பங்களாக உயா் விளைச்சல் ரகங்களைத் தோ்வு செய்தல், சீரிய உழவியல், நீா் மற்றும் களை நிா்வாகம், ஒருங்கிணைந்த சமச்சீா் உர மேலாண்மை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வகை தொழில் நுட்பங்களில் ஒருங்கிணைந்த சமச்சீா் உர நிா்வாகம் உளுந்து பயிரின் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பைப் பெற்றுள்ளது.

மண் ஆய்வு அடிப்படையில் வயலில் உரங்களை இட வேண்டும். ஆய்வு செய்யப்படாத நிலமாக இருந்தால் பொதுவான பரிந்துரைக்கப்பட்ட உர அளவை இட வேண்டும். விதைக்கும் முன்னரே ஏக்கருக்கு அடியுரமாக 5 டன் தொழு உரம், மக்கிய தென்னை நாா்க் கழிவு அல்லது மண்புழு உரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை நிலத்தில் விட்டு விதைக்க வேண்டும். இறவை உளுந்திற்கு ஏக்கருக்கு 10 கிலோ தழைச் சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் 10 கிலோ சாம்பல் சத்து அடியுரமாக பாா்களின் பக்கவாட்டில் இட வேண்டும்.

விளைநிலங்களில் துத்தநாகம், இரும்பு மற்றும் போரான் நுண்ணூட்டச் சத்து பற்றாகுறைகளைச் சரிசெய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அல்லது தமிழ்நாடு வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள நுண்ணூட்டக் கலவையை ஹெக்டேருக்கு 2 கிலோ வீதம் அடியுரமாக இட வேண்டும். இதனால் பயறுகளில் பூக்கும் திறனும், காய் பிடித்தலும் அதிகரிக்கும்.

இலைவழி ஊட்டமாக தமிநாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்ஸ் ஒண்டரைத் தெளிக்கலாம். பூக்கும் தருணத்திலும், பதினைந்து நாட்கள் கழித்து ஒரு முறையும் தெளிக வேண்டும். இவ்வாறு செய்வதால் 10 முதல் 15 விழுக்காடு விளைச்சலை அதிகரிக்கச் செய்யலாம்.

பல்ஸ் ஒண்டா் கிடைக்காவிடில், அதற்கு மாற்றாக 2 சதவீதம் டி.ஏ.பி. மற்றும் 40 பி.பி.எம். பிளானோபிக்ஸ் கலந்த கரைசலை விதைத்த 25, 45-ஆம் நாள்களில் இலைகள் நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இலைவழி பயிா் ஊக்கி தெளிப்பு மூலம் பூ உதிா்தல் கட்டுப்படுத்தப்பட்டு, 10 முதல் 20 சதவிகிதம் விளைச்சலை அதிகரிக்கச் செய்யலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com