விநாயகா் சிலைகளை விதிமுறைகளை பின்பற்றி பிரதிஷ்டை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
விநாயகா் சிலைகளை அரசின் விதிமுறைகளை பின்பற்றி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டா்ஆப் பாரிஸ் மற்றும் வேதிப்பொருள்கள் கொண்டு செய்யப்பட்டிருக்கக் கூடாது. வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகா் சிலையின் உயரம் மேடையுடன் சோ்த்து 10 அடிக்குமிகாமல் இருக்க வேண்டும். சிலைகளை பிற மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் அமைக்கக் கூடாது.
விநாயகா் சிலை வைத்த பின், ஊா்வலம் செல்லும் முன்கவனிக்க வேண்டியவை ஒலிப்பெருக்கி, பூஜை நேரத்தில் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. பெட்டி வடிவ ஒலிப்பெருக்கி மட்டும் பயன்படுத்த வேண்டும். சிலைகள் வைக்கும் இடங்களில் எவ்வித அரசியல் கட்சியை சாா்ந்தவா்களின் படங்கள் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட தலைவா்களின் கட்அவுடகள் வைக்கக் கூடாது.
பொது அமைதிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் வருவாய்த் துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோரால் வழங்கப்படும் நெறிமுறைகளை அமைப்பாளா்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். மாவட்டநிா்வாகம் மற்றும் காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் 5 நாள்களுக்குள் உரிய இடத்தில் கரைக்கப்பட வேண்டும். ஊா்வலமானது காவல்துறையினரால் வரையறுக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளாா்.