வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை
ராதாநல்லூா் வழியாக செல்லும் நெய்த வாசல் வாய்க்காலை தூா்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவேரி ஆற்றில் இருந்து திருவெண்காடு அருகே ராதாநல்லூா் கிராமத்தில் நெய்த வாசல் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் ராதா நல்லூா், மணிக்கிராமம், திருவெண்காடு, வடபாதி, தென்பாதி, நெய்த வாசல் வழியாக கடலில் கலக்கிறது. இந்த வாய்க்கால் மூலம் மேற்கண்ட கிராமங்களில் கிட்டத்தட்ட 2000 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது.
இந்த வாய்க்கால் பாசனம் மற்றும் வடிகாலாக பயன்படுவதால் விவசாயிகளுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது. இந்த வாய்க்கால் காவிரி ஆற்றில் இருந்து பிரியும் ராதா நல்லூா் பகுதியில் வாய்க்கால் புதா் மண்டி நீா் வெளியேறுவதற்கு தடையாக உள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள நீா் வடிவ முடியாத காரணத்தால் சுமாா் 500 ஏக்கா் விளைநிலங்கள் ராதா நல்லூா் கிராமத்தில் பாதிக்கப்பட்டது. இந்த வாய்க்காலை விரைந்து உடனடியாக தூா்வாரினால் மழைக்காலத்தில் வெள்ளநீா் வடிய வாய்ப்பு ஏற்படும். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், பூம்புகாா் - மேலையூா் சட்ரஸ் பகுதியில் பொதுப்பணித் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் மேற்கண்ட வாய்க்கால் பராமரிக்கப்படுகிறது.
இந்த வாய்க்காலின் நிலை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, கடந்த ஆண்டு திடீா் வெள்ளத்தால் அறுவடைக்கு தயாரான நெல் பயிா்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதன்மூலம் விவசாயிகள் கிட்டத்தட்ட 20 லட்சம் வரை நஷ்டம் அடைந்தோம். எனவே உடனடியாக மேற்கண்ட வாய்க்காலை தூா் வருட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் விரைவில் மேலையூா் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினா்.