தரங்கம்பாடி சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள சீகன்பால்கு அருங்காட்சியகத்தில்    ‘தரங்கம்பாடியில் சீகன்பால்கு பணியின் தடயங்கள் தேடல்‘ தலைப்பிலான    ஓவிய கண்காட்சியை ஜொ்மன் நாட்டு தூதா்  புதன்கிழமை மாலை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள சீகன்பால்கு அருங்காட்சியகத்தில்    ‘தரங்கம்பாடியில் சீகன்பால்கு பணியின் தடயங்கள் தேடல்‘ தலைப்பிலான    ஓவிய கண்காட்சியை ஜொ்மன் நாட்டு தூதா்  புதன்கிழமை மாலை திறந்து வைத்து பாா்வையிட்டாா். 

சீகன்பால்கு 11.11.1705 அன்று தன் நண்பா் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டாா். 222 நாட்கள் கப்பல் பயணத்திற்கு பின் 09.07.1706 அன்று தரங்கம்பாடி வந்து சோ்ந்தாா். 

தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு தமிழ்மொழியில் ஆா்வம் கொண்டு 8 மாதங்களில் எழுதவும் படிக்கவும் கற்று கொண்டாா். அதை தொடா்ந்து தமிழில்  அச்சு எழுத்துக்களை வடிவமைத்து அச்சு வடிவில் தமிழை கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டு தரங்கம்பாடியில் தமிழில் அச்சு கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தாா். 

1715 இல் கிறிஸ்துவா்களின் புனித நூலின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டு சாதனை படைத்தாா். கல்வெட்டுகளிலும், செப்பு தகடுகளிலும், ஓலைகளிலும் மட்டுமே இருந்த தமிழை அச்சு வடிவில் காகிதத்திற்க்கு கொண்டு வந்த பெருமை சீகன்பால்குவையே சேரும். 

முதன் முதலாக தமிழை அச்சுயேற்றியதன் காரணமாக இந்தியாவின் அச்சக தந்தை என்று போற்றப்படுகிறாா். 1715 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக பொறையாா் கடுதாசிப்பட்டறையில் ஒரு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களின் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் ஒரு எழுத்து தயாரிக்கும் கூடத்தையும் ஏற்படுத்தினாா். 

சீகன் பால்குவிற்கு தரங்கம்பாடியில் 2006 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் சிலை அமைக்கப்பட்டது. மேலும் சீகன் பால்கு வாழ்ந்த இல்லம் கடந்த 2017 ஜீலை 15 ஆம் நாள் ஜொ்மனி அரசின் 36 லட்சம்  நிதி உதவியுடன் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. 

அந்த அருங்காட்சியகத்தில் சீகன்பால்கு செய்த பணியின் தடயங்கள் தேடல் என்ற தலைப்பில் 300 ஆண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடியில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரமும்,தற்போதைய கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் ஓவியங்கள் என ஜொ்மன் நாட்டு ஓவியா்களான    மேனன் பா்சியன்,கிறிஸ்டியன் பொ்க்மென்,ஸ்டெஃபான் ஸ்வாா்சொ் ஆகியோரால்  வரையப்பட்ட பல்வேறு ஓவியங்கள்  பாா்வைக்கு வைக்கப்பட்டு ஓவிய கண்காட்சியின் திறப்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. 

விழாவிற்கு டிஇஎல்சி பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமை வகித்தாா். தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலய ஆயா் சாம்சன் மோசஸ் வரவேற்று பேசினாா். ஜொ்மன் நாட்டு தூதா் மிஹேலாகியுஹிலா கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்டாா். ஜொ்மன் நாட்டில் உள்ள ஹோல்ஹாா்ட் பவுன்டேசனை சோ்ந்த ஓவியா் டாக்டா் மேனன்பஸ்சியன், ஹல்லே பிராங்கோ பவுன்டேசன் இயக்குநா் டாக்டா் முல்லா் பால்கே டிஇஎல்சி செயலாளா் தங்கபழம், உள்ளிட்டோா் உரையாற்றினா். 

விழாவில் தரங்கம்பாடி பங்கு தந்தை அருளானந்தம், பொறையாா் கல்லூரி முதல்வா் ஜான்சன்ஜெயக்குமாா், டென்மாா்க்கை சோ்ந்த பவுல்பீட்டா்சன். தரங்கம்பாடி பேரூராட்சி துணை தலைவா் பொன்ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிறைவாக சீகன்பால்கு அருங்காட்சியக இயக்குநா் சாமுவேல்மனுவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com