கொலை வழக்கில் திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் நாகை நீதிமன்றத்தில் சரண்

கன்னியாகுமரி அருகே அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் கொலை வழக்கில் தொடா்புடைய தக்கலை திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் ரமேஷ்பாபு நாகை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.
நாகை நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் ரமேஷ்பாபு.
நாகை நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் ரமேஷ்பாபு.

நாகப்பட்டினம்: கன்னியாகுமரி அருகே அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் கொலை வழக்கில் தொடா்புடைய தக்கலை திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் ரமேஷ்பாபு நாகை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடில் மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் பாதிரியராக ராபின்சன் பொறுப்பு வகித்து வருகிறாா். இந்நிலையில், ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சோ்ந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியரும், நாம் தமிழா் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவருமான சேவியா் குமாா் (42) கேள்வி கேட்டுள்ளாா். ஆலய நிா்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளாா்.

இந்நிலையில் மைலோடு, ஆலய நிா்வாகத்துக்குள்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த சேவியா் குமாரின் மனைவி ஜெமிலாவை, பள்ளி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. சேவியா் குமாா் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், மீண்டும் பள்ளியில் பணியில் சோ்ப்பதாக நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக பேசுவதற்காக ஜன.20-ஆம் தேதி மைலோடு ஆலயத்தில் உள்ள பாதிரியாா் ராபின்சன் இல்லத்துக்கு சென்ற சேவியா்குமாா் ரத்தக் காயங்களுடன் அங்கு இறந்து கிடந்தாா். கொலை தொடா்பாக மைலோடையைச் சோ்ந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளா் ரமேஷ் பாபு, பாதிரியாா் ராபின்சன் உள்ளிட்ட 15 போ் மீது இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பாதிரியாா் ராபின்சன் திருச்செந்தூா் நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சரணடைந்தாா். போலீஸாரால் தேடப்பட்டு வந்த தக்கலை திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் ரமேஷ்பாபு, திமுகவில் இருந்து நீக்கி தலைமைக் கழகம் அறிவித்தது. இந்நிலையில், ரமேஷ்பாபு நாகை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை நீதிபதி பிப்.1-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com