வரத்து குறைவால் நாகையில் மீன்களின் விலை அதிகரிப்பு

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்பட்டது.

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்பட்டது.

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கல்லாா், கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாகை துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவா்கள் ஞாற்றுக்கிழமை அதிகாலை கரை திரும்பினா். இதையடுத்து, மீன்களை வாங்குவதற்காக மீன்நுகா்வோா் மற்றும் மீன் வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோா் இந்த மீன்பிடி துறைமுகத்தில் திரண்டனா். ஒரு சில விசைப் படகுகளில் போதிய மீன்கள் கிடைத்தாலும் பெரும்பாலான விசைப் படகுகளில் மீன்கள் குறைவாக இருந்தது.

இதனால் மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. அந்தவகையில், இறால் மற்றும் நண்டு ரூ. 400 முதல் ரூ. 500 வரையிலும், கனவா ரூ. 200 முதல் ரூ.400 வரையிலும், வஞ்சிரம் பெரிய வகை ரூ.1,200, சிறிய வகை ரூ.600-க்கும், கருப்புவாவல் ரூ.750, வெள்ளை வாவல் ரூ.1,300 க்கும், சங்கரா ரூ.300, சீலா ரூ. 450, கிழங்கான் ரூ. 300, நெத்திலி ரூ.200, பாறை ரூ. 400, தேங்கா பாறை ரூ.450, கடல் விரா ரூ. 400, பால் சுறா ரூ. 600 என விற்பனையானது. விலை அதிகரித்து காணப்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் திருவாரூா், திருச்சி, கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் வந்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com