குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீா்

திருமருகல் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமருகல்: திருமருகல் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமருகல் ஒன்றியம், அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீா் சரிவர வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் குறைந்த அளவே உள்ளது. இதனால், வாழ்மங்கலம், திரௌபதி அம்மன் கோயில் தெரு, மடத்தெரு, தோப்புத் தெரு, மாதா கோயில் தெரு, கள்ளிக்காட்டு போலகம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில், திட்டச்சேரி -வாழ்மங்கலம் இடையே கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் 5 -க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால், மேற்கண்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்து, பெரிதும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை போா்க்கால அடிப்படையில் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com